VGLUGன் கோரிக்கை வலு பெறுகிறது.
தென்னாற்காடு மாவட்டத்தின் வாரிசாக உருவாகிய விழுப்புரம் மாவட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் எனும் புதிய வாரிசை ஈன்றுள்ளது.
வாரிசுகள் திறன்களை வளர்த்து கொண்டால் வளமான எதிர்காலம் உண்டு.
1993ல் தான் உருவாகிய போது தொழில் வளர்ச்சியின் எவ்வித வாசமும் அற்ற, விவசாயத்தை மட்டுமே பிரதானமான வேலையாக கொண்ட எண்ணற்ற உழைக்கும் கரங்களை பற்றி நின்றது இந்த மருதநிலம்.
கல்வி எனும் கண் கொண்டு உலகை காண முற்பட்டதன் விளைவாக இந்த மாவட்டத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளின் எண்ணற்ற போராட்டங்களின் பயனாக கலை, அறிவியல், பொறியயில், மருத்துவம், சட்டம் என அரசுக்கல்லூரிகள் வரிசையாக விழுப்புரம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன். இவையனைத்தும் இன்று ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
ஆனால் தொழில் வளர்ச்சியில் குறிப்படும் படியான எவ்வித முன்னேற்றமும் நிகழாமல் இருப்பதால் எண்ணற்ற இளம் பெண்களும், இளைஞர்களும் தங்களது வாழ்வாதரத்துக்காக மாநகரங்களை நோக்கி பஞ்சம்பிழைக்க செல்ல வேண்டிய நிலையுள்ளது.
இன்று தனது நிலப்பரப்பில் ஒரு பகுதி வளர்ச்சிக்காக மற்றொரு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்பரம் மாவட்டத்தின் இளைஞர்களின் சார்பாக கீழ்காணும் ஒற்றை கோரிக்கையை பிரதானமாக முன்வைக்கிறோம்:
“விழுப்புரத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (IT Industrial Park) அமைத்திடுக”
இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும், இளம்பெண்களும் தங்களது சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகிடும். இம்மாவட்த்தின் பொருளாதார வளர்ச்சியும் பல மடங்கு உயரும்.
இந்த மதிப்புமிக்க கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் 20-01-2021-ல் விழுப்புரத்தில் நடைபெற்ற முனைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கான பாராட்டு விழாவில் VGLUG-ன் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களிடம் விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என்று கூறி மனு அளிக்கப்பட்டது.
மேலும், தொகுதியின் அடிப்படை தேவைகளை தெளிந்த முறையில் உள்வாங்கி அதை பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்யும் அன்பு தோழர் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. ரவிக்குமார் அவர்கள் மத்திய நிதியமைச்சருக்கு 2019-2020 நடைபெற்ற குளிர்கால கூட்ட தொடரில் விழுப்புரம் மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் வலியுறுத்தி கடிதம் அனுப்பியிருந்தார்(சில மாதங்களுக்கு முன்பு). அதில் குறிப்பாக VGLUG அமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையான விழுப்புரத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பதையும் எழுத்து பூர்வமாக எழுப்பியிருந்தார். முதல்முறையாக VGLUGன் தொழில்நுட்ப பூங்கா கோரிக்கை அரசின் காதுகளை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதை சாத்தியப்படுத்திய விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இருப்பினும், அக்கோரிக்கைக்கு மத்திய அரசு அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.


கடந்த வாரம், புதிய தலைமுறையின் விழுப்புரம் தொகுதிக்கான நாடிக்கணிப்பு நிகழ்வின் மக்கள் கலந்தாய்விலும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக நாம் அனைத்து மட்டங்களிலும் வலியுறுத்துவோம். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மனுவை திருமாவளவன் அவர்களிடமும் கொடுத்துள்ளோம்.
விழுப்புரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வோம்.
#VGLUG #VillupuramITPark #VillupuramNeedITPark
2 thoughts on “Petition for Villupuram IT Park establishment behalf of VGLUG”