ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் வாராந்திர கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 12 ஆம் தேதியில் நடைபெற்ற வாராந்திர வகுப்பில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

அந்த வகையில் இந்த வார வகுப்பில் மின்னஞ்சல் (e-Mailing) பற்றிய விரிவான வகுப்பை எடுத்தோம். இமெயில் பற்றிய அறிமுகத்தை திலீப் அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார். பழங்காலத்தில் அஞ்சல் எப்படி அனுப்பினார்கள், தற்போது எப்படி அது இமெயிலாக மாறி உள்ளது என்பதையெல்லாம் தெளிவாக மாணவர்களுக்கு புரியும்படி எடுத்து கூறினார். இதை பற்றி, மாணவர்கள் தங்களுக்குள் இருந்த பல கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்தையும் திலீப் விளக்கி கூறினார்.

அடுத்தாக ஜிமெயிலில் (Gmail) எப்படி கணக்கு துவங்குவது என்பதை ஹரி பிரியா விளக்கினார். இதன்படி ஒவ்வொரு படிநிலையாக கரும்பலகையில் எழுதிப் போட்டு மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறினார். வினாடி-வினா கேள்விக்கு பதிலளிக்கும் மாணவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரின் பெயரை கொண்டு உதாரணமாக ஒரு ஜிமெயிலை உருவாக்கி காட்டினார்.

பிறகு மாணவர்களுக்கு ஏற்ற வகையில் ஜிமெயில் ஐடி ஒன்றை நோட்டில் எழுத சொன்னார். அடுத்தாக மாணவர்களை 3 குழுக்களாக பிரித்து அக்குழுக்களுக்கு சூரியன், வியாழன், செவ்வாய் (Sun, Jupiter, Mars) என்று கோள்களின் பெயர்களை வைத்து, அந்த கோள்களின் ஆங்கில எழுத்தை ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுத்து அதில் உள்ள ஊரை பற்றியோ அல்லது பிரபலமான நபரை பற்றியோ டைப் செய்து, புகைப்படங்களை ஜிமெயிலில் சேர்த்து ஹரி பிரியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று குட்டி டாஸ்க் ஒன்று கொடுத்தார். இதற்கு பொறுப்பாக 3 குழுக்களிலும் 3 தலைமை பொறுப்பாளிகளையும் நியமித்தார். இதில் சிறப்பாக ஜிமெயில் அனுப்பும் மாணவர்களுக்கு பரிசு பொருள் உண்டு என்பதையும் இணைத்து கூறினார். இதை கேட்டதும் மாணவர்களுக்கு உற்சாகம் பிறந்து விட்டது.

இறுதியாக சில பொது அறிவு கேள்விகள் கொண்ட வினாடி-வினா நிகழ்வுடன் இந்த வார வகுப்பு இனிதே நடந்து முடிந்தது.