கணினிசார் தொழில்நுட்பத்தை, அறிவியலை, கிராமப்புறங்களில் வசிக்கும் சிறார்களுக்கு செயல்வழி பயிற்சி மூலம் VGLUG அமைப்பு தொடர்ச்சியாக பயிற்றுவித்து கொண்டிருக்கிறது. 100 கிராமங்களில் 100 GLUGs முன்னெடுப்பின் மூலம் இதை சாத்திப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான இலவச கோடிங் பயிற்சி பட்டறை (Kids Code Camp) என்கிற முன்னெடுப்பை இரண்டு நாள் பயிலரங்கமாக பாணாம்பட்டு கிராமத்தில் VGLUG அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும் இந்த இரு நாள் வகுப்பை கொண்டு சென்றோம்.

அக்டோபர் மாதம் என்பதால் காலாண்டு தேர்வு விடுமுறையில் இருந்த குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான விடுமுறையாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கிலும் இந்த முன்னெடுப்பை தொடங்கினோம். அக்டோபர் 8 & 9, 2022 தேதிகளில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான இலவச கோடிங் பயிற்சி பட்டறையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ‘Scratch’ என்கிற கோடிங் அடிப்படை மென்பொருள் பற்றி வகுப்பு எடுத்திருந்தோம்.

இந்த இரண்டு நாள் வகுப்பை குழந்தைகள் சிறப்பாக பயன்படுத்த அவர்களை 2-3 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் தனி தனி கணினிகளை கொடுத்து பயிற்சி வழங்கினோம்.
நாள் 1: (அக்டோபர் 8, 2022)

முதல் நாள் வகுப்பில் Scratch பற்றிய அறிமுகத்தையும், இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையின் முக்கியத்துவத்தை பற்றியும் செல்வி. ஹரிபிரியா எடுத்து கூறினார். அடுத்தாக, கணினி மற்றும் அதிலுள்ள ஹார்டுவேர் பற்றிய சிறிய அறிமுகத்தை கொடுத்து Scratch வகுப்பை திரு. விக்னேஷ் தொடங்கினார். இந்த Scratch மென்பொருளில் உள்ள ஒவ்வொரு அடிப்படை விஷயத்தையும் குழந்தைகளுக்கு எளிமையாக புரியும் விதத்தில் விளக்கினார்.

பிறகு Scratch-ஐ பயன்படுத்தி எப்படி எளிமையாக ஒரு கேம் போர்டை உருவாக்கலாம் என்பதையும் செயல்வழியாக செய்து காட்டினார். இதில் மாணவர்கள் தங்களுக்குள் இருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெளிவு பெற்றனர். குழந்தைகளின் ஒவ்வொரு சந்தேகங்களையும் விக்னேஷ் சிறப்பான முறையில் தெளிப்படுத்தினார்.

அடுத்தாக, Scratch பயன்படுத்தி எப்படி ஒரு கேமிங்கை உருவாக்கலாம் என்பது குறித்து திரு. கிஷோர் வகுப்பு எடுத்தார். இதில் ஒரு கோழி, முட்டையை பிடிப்பது போன்ற கேமிங்கை செய்து காட்டி குழந்தைகளை ஆச்சரியப்படுத்தினார். இதை பார்த்த குழந்தைகள் தாங்களும் இது போன்று கேமிங்கை உருவாக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். மதிய உணவிற்கு பிறகு எல்லோரும் இது போன்று உருவாக்கலாம் என்று கூறிக்கொண்டு உணவு இடைவேளையை எடுத்து கொண்டோம்.


மதிய உணவானது திரு. செந்தமிழ் அன்பு அவர்களால் எல்லா குழந்தைகளுக்கும், VGLUG அமைப்பை சேர்ந்த எங்களுக்கும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடை, பாயாசத்துடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. எல்லோரும் உணவு இடைவேளையை முடித்து கொண்டு மீண்டும் வகுப்பில் கூடினோம்.

பிறகு எல்லோரையும் 2-3 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் தனி தனி கணினிகளை வழங்கி, சிறு சிறு கேமிங் டாஸ்க்குகளை கொடுத்தோம். இந்த 2 நாள் வகுப்பில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு வகுப்பின் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும் என்பதையும் குறிப்பிட்டோம். இதை கேட்டதும் மாணவர்கள் உற்சாகமாக கேமிங் உருவாக்க தொடங்கினர்.

Scratch-இல் பயிற்சி பெற தொடங்கியதும் மாணவர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்தது. அவை அனைத்தையும் எங்களிடம் கேட்டு தெளிவு பெற்றனர். நாளின் இறுதியில் எல்லா குழுவினரும் ஒவ்வொரு கேமிங் போர்ட்டை உருவாக்கி அசத்தினர்.

காடு, மலை, பனி பிரதேசம், அரண்மனை, பூங்கா, விண்வெளி போன்ற புதுமையான தீம்களை அடிப்படையாக கொண்டு இந்த கேமிங்கை உருவாக்கினார்கள். இறுதியாக காலை முதல் மாலை வரை என்னவெல்லாம் கற்று கொண்டோம் என்பதை ஒவ்வொரு மாணவர்களும் பரிமாறி கொண்டனர். இப்படியாக முதல் நாள் நிகழ்வு முடிவு பெற்றது.
நாள் 2: (அக்டோபர் 9, 2022)

இரண்டாம் நாள் பயிற்சி பட்டறையானது பாணாம்பட்டில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முதல் நாள் வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் இரண்டாம் நாள் வகுப்பிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வகுப்பின் தொடக்கத்தில் முதல் நாள் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம் என்பதை பற்றி செல்வி.ஹரிபிரியா சில கேள்விகளை கேட்டார்.

மாணவர்கள் அவற்றிற்கு சிறப்பாக பதில் தந்தனர். அடுத்தாக Scratch-இல் உருவாக்க கூடிய மற்றுமொரு கேம் (Bowl in the Ball game) பற்றிய அறிமுகத்தையும், அதை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் செல்வி. கீர்த்தனா விளக்கி கூறினார்.

அதன் பிறகு அந்த கேம் பற்றிய ஒவ்வொரு படிநிலைகளையும், விளக்கி அது எதற்காக அங்கு சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்து கூறினார். பிறகு மாணவர்கள் தனி தனி குழுக்களாக பிரிந்து அந்த கேமை தாங்களாக செய்வதற்கு முயற்சி செய்தனர். கேமை உருவாக்கும் போது அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை தீர்க்க நமது VGLUG தன்னார்வலர்களான திரு. தீபக், செல்வி. வைபவி, செல்வி. அபிநயா ஆகியோர் உதவினர்.

எல்லா மாணவர்களும் இரண்டாம் நாளிலும் சிறப்பான முறையில் கேமை உருவாக்கி அசத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மாணவர்கள் எல்லோருக்கும் ஓரிகாமி மூலம் பூனையை எப்படி செய்ய வேண்டும் என்று கீர்த்தனா அவர்கள் செய்து காட்டினார்.

கோடிங்கை மகிழ்ச்சியாக கற்று கொண்ட அதே ஆர்வத்தோடு ஓரிகாமி மூலம் பூனையை செய்யவும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் உருவாக்கிய பூனையை வைத்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.



இரண்டு நாள் Kids Code Camp-இன் இறுதி நிகழ்வாக ஒவ்வொரு மாணவர்களையும் தங்களது 2 நாள் பயிற்சி பட்டறையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.


மாணவர்கள் இந்த வகுப்பு மிகவும் பிடித்திருந்தது என்றும், Scratch-கோழி முட்டை கேம் செய்வதற்கு எளிதாக இருந்தது என்றும், இந்த வகுப்பு புதுவித அனுபவத்தை கொடுத்தது என்றும், நாங்களும் கேம் உருவாக்கி விட்டோம் என்றும், ஓரிகாமி பூனை சூப்பராக இருந்தது என்றும் குழந்தைகள் தங்களுக்கே உரிய மழலை மொழியில் அவர்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதன் பிறகு, இரண்டு நாள் வகுப்பு முழுவதும் உற்சாகமாக பங்குபெற்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் புத்தகம், பேனா, VGLUG ஸ்டிக்கர், கலர் பென்சில் போன்றவற்றை பரிசாக வழங்கி மகிழ்வித்தோம்.


இறுதியாக எல்லோரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டு நிகழ்வை முடித்து கொண்டோம்.

இரு நாள் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட VGLUG தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கீர்த்தனா, ஹரி பிரியா, விக்னேஷ், தீபக், திலீப், கிஷோர், வைபவி, அபிநயா, சதீஷ் குமார், கார்க்கி
பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட மாணவர்கள் உருவாக்கிய கேம்களில் சில:






‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ – நாளிதழில் நமது ‘Kids Code Camp’ குறித்த செய்தி 10.10.2022 அன்று வெளியாகியுள்ளது.

Glimpse video:
இது போன்று, குழந்தைகளுக்கான இலவச கோடிங் வகுப்புகள்/கேம்ப் உங்களது கிராமத்திலோ அல்லது பள்ளியிலோ நடத்த விரும்பினால் எங்களை 9600789681 தொடர்பு கொள்ளவும்.
https://vglug.org/category/villupuram-glug/100-glugs-in-100-villages/panampattu-glug/
VGLUG அறக்கட்டளையின் முன்னெடுப்புகள், தொழில்நுட்ப கூட்டங்கள் மற்றும் இதர நிகழ்வுகள் குறித்து தெரிந்துகொள்ள நமது VGLUG-இன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களது நண்பர்களுக்கும் இதை பகிரவும்.