கணியம் அறக்கட்டளை தனது வலைப்பதிவில் குறிப்பிட்டபடி,
https://www.kaniyam.com/tamil-free-software-conference/
“கட்டற்ற மென்பொருள் திருவிழா என்றதுமே எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், எங்களைச் சேர்க்காமல் விட்டு விடாதீர்கள்” என்று VGLUG(விழுப்புரம் குனு லினக்ஸ் பயனர் அமைப்பு) எங்கும் கேட்டதில்லை என்பதை முதலில் தெரியப்படுத்தி கொள்கிறோம்.
குறிப்பு
நமது வலுவான ஆட்சேபனைக்கு பிறகு, கணியம் கட்டளையின் வலைப்பதிவிலிருந்து ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்கிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
VGLUG அமைப்பும் TOSS மாநாடும்
‘அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு’ – குறள்
திரு. சீனிவாசன் அவர்கள், சென்னையில் தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நடக்க இருப்பதாகக் கூறி VGLUG அமைப்பைச் சேர்ந்த திரு. கார்க்கி அவர்களிடம் தொலைபேசியில் அழைத்து நிகழ்ச்சியை எப்படி சிறந்த முறையில் நடத்தலாம் என்பதற்கான உதவியும், யோசனையும் கேட்டுக்கொண்டார். மேலும், செப்டம்பர் 17ஆம் தேதி மாநாடு நடத்த இருப்பதாகவும் மற்றும் மாநாட்டிற்கு இரண்டு பெண் பேச்சாளர்கள் வேண்டுமென்றும் நம்மிடம் (VGLUG) அழைப்பு விடுத்திருந்தார்கள்.
VGLUG அமைப்பான நாமும் செப்டம்பர் 17 ஆம் தேதியில் கட்டற்ற மென்பொருள் கண்காட்சியை (SFD 2022) வைக்கத் திட்டமிட்டிருந்தோம். அவர்களும் அதே தேதியைக் கூறியதால், திரு. சீனிவாசன் மற்றும் TOSS(Tamil Open Source Software) மாநாட்டிற்காகவும், நாம் அதற்கு அடுத்த வாரமான செப்டம்பர் 25 அன்று நமது நிகழ்ச்சியினை வைத்துக் கொள்ளலாம் என்று தேதியினை மாற்றிக் கொண்டோம்.
இது குறித்து திரு. சீனிவாசன் அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் (இடம்) TOSS மாநாடு செப்டம்பர் 24, 25 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், 24ஆம் தேதி அன்று நம் பேச்சாளர்களை கலந்து கொள்ளுமாறும் கூறினார்.
கடந்த 10 வருடமாக தொடர்ச்சியாக இயங்கி வரும் VGLUG அமைப்பின் 10 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த வருட SFD நிகழ்ச்சியை பெரும் விமர்சையாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். அதற்கான பணிகளை நமது VGLUG தன்னார்வலர்கள் (2 பேச்சாளர்கள் உட்பட) பிரித்துக்கொண்டு பணிகளை செய்து வந்தனர்.
ஏற்கனவே இரண்டு பெண் பேச்சாளர்கள் 17ஆம் தேதி நடக்கவிருந்த TOSS மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், செப்டம்பர் 25 ஆம் தேதி VGLUG-இன் SFD (Software Freedom Day) நிகழ்வு இருந்தபோதிலும், மாநாட்டின் தேதி மாற்றம் காரணமாக 24 ஆம் தேதி TOSS மாநாட்டில் உரையாட ஒப்புக்கொண்டோம்.
நமது VGLUG அமைப்பில் இருந்து “இந்தியாவில் கட்டற்ற மென்பொருட்கள் பயன்பாடு, பங்களிப்புகள்” என்கிற தலைப்பில் செல்வி. விஜயலட்சுமி அவர்களும், “விக்கிப்பீடியாவின் தாக்கம்” என்கிற தலைப்பில் செல்வி. ஹரிபிரியா அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
VGLUG SFD பணிகள் இருந்ததாலும், நேரம் குறைபாட்டு காரணமாகவும், விழுப்புரத்திலிருந்து சென்னையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு சென்று வருவதற்காக வாகன ஏற்பாடு செய்து தருமாறு திரு.சீனிவாசன் அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் வாகன வசதி செய்து தரப்பட்டது. நிகழ்ச்சியில் VGLUG சார்பாக செல்வி.ஹரிபிரியா, செல்வி.விஜயலட்சுமி மற்றும் திரு.கார்க்கி கலந்து கொண்டனர்.
நிகழ்வில் VGLUG சார்பாக பங்குகொண்ட பேச்சாளர்களுக்கு சரியான அறிமுகமும், அங்கீகாரமும், வரவேற்பும் தரப்படவில்லை என்பதையும் ஏற்கனவே திரு. சீனிவாசன் அவர்களிடமும் முன்வைத்திருந்தோம். அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து நிகழ்வில் கலந்துகொண்டமைக்கு நன்றியும், கலந்துகொண்ட VGLUG பேச்சாளர்களை சரியான முறையில் நடத்தப்படவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்து மின்னஞ்சல் (email) அனுப்பப்பட்டது. மேற்குறிப்பிட்ட வலைப்பதிவைப் பதிவிட்ட திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கும் அந்த மின்னஞ்சல் (Cc) பகிரப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள கணியம் பதிவில் எங்களையும் (VGLUG) மாநாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடிக் கேட்பதுபோல் குறிப்பிட்டு இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
VGLUG-யும் TOSS மாநாட்டில் இணைந்து கொள்ளுங்கள் என்று நாம் எப்போதும் அவர்களை கேட்டு கொள்ளவில்லை. VGLUG அமைப்பு இன்று வரையிலும் தனது குழுவின் பலத்துடன் தன்னிச்சையாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து இந்தியாவிலேயே முன் மாதிரியான FOSS(Free and Open Source Software) அமைப்பாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் இது போன்று பிற அமைப்புகளை தாழ்வுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதுமில்லை. TOSS மாநாடு குறித்து கணியம் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில் VGLUG போன்ற மற்ற சகோதர அமைப்புகளை சரியான மதிப்பிடலில் கவனிக்கவில்லை என்றே கருதவைக்கிறது.
எனவே, கணியம் அறக்கட்டளை மாநாடு குறித்து வெளியிட்ட பதிவிலிருந்து அவர்கள் குறிப்பிட்ட, “கட்டற்ற மென்பொருள் திருவிழா என்றதுமே எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், எங்களைச் சேர்க்காமல் விட்டு விடாதீர்கள்” என்பதை திருத்திக் கொள்ளவும் அல்லது அதிலிருந்து விழுப்புரம் அமைப்பு பெயரை நீக்கிவிடவும், மேலும் இதுபோன்ற பதிவிடலை தவிர்க்குமாறும் VGLUG அறக்கட்டளை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு சிறந்த முறையில் நடைபெற்றது. பங்கு கொண்ட அனைவருக்கும், பேச்சாளர்களுக்கும் VGLUG சார்பாக மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
இணையற்ற கட்டற்ற மென்பொருள் சமூகத்தை உருவாக்க என்றும் இணைந்து பயணிப்போம்!
இப்படிக்கு
VGLUG ஒருங்கிணைப்பு குழு,
https://vglug.org/