Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Dec 19, 2021

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் டிசம்பர் 19, 2021 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

அந்த வகையில் இந்த வார வகுப்பில் இணையம் (Internet) எப்படி வேலை செய்கிறது, அதன் கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை பற்றிய விரிவான வகுப்பை விக்னேஷ் எடுத்தார். இணையத்தை பற்றிய முழு வடிவமைப்பை கரும்பலகையில் வரைந்து காட்டி அதை பற்றிய விளக்கத்தை கொடுத்தார். இணையம் பற்றி மாணவர்களுக்கு இருந்த பல கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்தையும் விக்னேஷ் விளக்கி கூறினார்.

பிறகு மாணவர்களை அழைத்து ஒவ்வொருவராக இணையம் பற்றி விளக்க சொன்னார். இதன் மூலம் அவர்களுக்கு இணையம் பற்றி அடிப்படை புரிதலை கொடுக்க முடிந்தது. இந்த வகுப்பில் இணையத்தின் வளர்ச்சி நிலையை பற்றியும் விளக்கி கூறினார்.

அடுத்தாக நாம் கற்று கொள்ளும் அடிப்படை கணினி அறிவு எந்த அளவில் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது என்பதை ஹரி பிரியா விளக்கினார். இதனுடன், சில நாட்களுக்கு முன்பு நாசா சூரியனை எப்படி தொட்டது என்பதை பற்றிய தொழில்நுட்பதையும் தெளிவாக விளக்கி கூறினார்.

இதை கேட்டதும் பல மாணவர்கள் இந்த சாதாரண கணினியின் அறிவை வைத்து நம்மால் சூரியனை கூட தொட முடியுமா? என்கிற வியப்பான கேள்வியை கேட்டு கொண்டனர். பிறகு இவை அனைத்திற்கும் பின்புறத்தில் இருந்து செயல்பட கூடிய நிரல் மொழிகளை (Programming Languages) பற்றியும் குறிப்பிட்டார்.

விண்வெளி பற்றிய கலந்துரையாடலுடன் இந்த வார வகுப்புகள் முடிவடைந்தது.

Leave a comment